இவனுக்காகத்தான் ஜான்வி தன் அண்ணனை பற்றி யோசிக்க மறுக்கிறாளோ என எழுந்த யோசனையோடு மிதா பார்த்துக் கொண்டிருக்க.. அம்மாஆஆ.. அசோக் கையில் இருந்து ஜான்வியிடம் தாவினாள் கிருத்தி..
அம்மாகிட்ட தான் போவீங்களா.. அத்தை கிட்ட வர மாட்டீங்களா.. அத்தை என்பதில் அசோக்கை பார்த்தபடி அழுத்தியது அவள் குரல்..நானும் அவளுக்கு உரிமையானவள்.. அவள் இரத்த உறவு என்ற ரீதியில்..
போ.. ஜானு நீட்ட.. இவள் இடுப்பில் தொத்தி கொண்டாள் கிருத்தி.. அடடே கியூட் பேபி.. அழகா இருக்கீங்க.. என்றவளுக்கு எப்படியாவது ஜான்வீயும் குழந்தையும் தன் அண்ணனோடு சேர்ந்து விட்டால் போதும் என்ற எண்ணம் அலாதியாய்.
காரில் வந்த போது பார்க்காமல் பார்த்ததிலும் அவன் முகத்தில் இருந்த சோர்வை கண்டாளே..
ஜானு கூறியது போல் ரூபாவுடனான திருமணத்திற்கு அவன் சம்மதம் கூறி இருக்கலாம்.. ஆனால் அதுவும் ஜான்வியை ஒத்துக்கொள்ள வைப்பதற்காகத்தானே...
இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே அவன் செய்தது அனைத்தும் தவறாகவே இருந்தாலும் அதற்காக தண்டனையில் அவன் தவிக்க விரும்பவில்லை அவள்.
ஏதோ ஒரு கட்டத்தில் ஜான்வி தன் அண்ணனை ஏற்றுக் கொண்டால் போதும்.. நிச்சயம் அவனுக்கும் தன் தோழிக்கும் நல்ல வாழ்க்கை அமையும்..
தான் இங்கிருந்து செல்வதற்குள் எப்படியாவது ஜான்வின் மனதை மாற்றி அவனோடு சேர்த்து வைத்து விட வேண்டும்.. என்பதில் முடிவானாள் மிதா.
அதற்கு ஆதாரம் கிருத்தி குட்டி.. தன் அண்ணனின் மகள் என்பதில் இவளுக்கும் அன்பு கூடியது.. சின்ன வயதில் வளர்ந்து நின்ற அண்ணனை இப்போது சின்ன உருவத்தில் பார்ப்பது போல் பிரம்மை.. உன் அப்பா மாதிரியே இருக்க.. அசோக்கை ஓரக்கண்ணால் பார்த்தபடியே நெற்றி முட்டி கொண்டதில்.. அப்பா.. என்ற வார்த்தையில் அடுத்த நிமிடம் அவனை அழைத்து அவனிடமே திரும்பி இருந்தாள் கிருத்தி.. மிதா முகம் கருத்தது..
இவர் உன் அப்பா இல்லை.. வாய் வரை வந்த வார்த்தையை உள்ளே விழுங்கி தள்ளினாள்.. முதலில் ஜானு சம்மதிக்க வேண்டும்.. அதன் பின்பு தான் குழந்தையிடம் மெல்ல மெல்ல எடுத்து சொல்ல வேண்டும் என்பதில் முடிவானவளாய் அசோக்கை பார்க்க.. ஏனோ அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை.. என்ன தான் அவன் தன் தோழிக்கு ஆபத்து காலத்தில் உதவினான் எனினும்.. இப்போது தன் அண்ணன் இருக்க வேண்டிய இடத்தில் ஜம்பமாய் இருப்பவன் அல்லவா..
இவனை ஓரம் கட்டிட்டா போதும்.. ஜானுவே குழந்தைக்கு துணை வேண்டும் என்பதற்காகவாவது அண்ணன் கூட வந்து சேர்ந்திடுவா.. எண்ணி கொண்டாள்..
அவள் அப்பா என குழந்தையை வர்ணித்ததில் அசோக் காயப்பட்டிருப்பானோ.. என ஜானு விக்கித்து போய் அவனை பார்க்க.. எந்த சலனமும் இல்லாமல் அவன் நின்றதில் பெருமூச்சு விட்டாள்.
ஜான்வி.. நீ உன் ஃப்ரெண்ட் கூட பேசிக்கிட்டு இரு.. எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.. போயிட்டு வந்துடறேன்.. என்றதோடு கிளம்பி விட்டான் அசோக்.
எங்க.. என கேட்க வாய் எடுப்பதற்குள் அவன் சென்று விட்டதில்.. நீ உக்காரு டி.. என விழித்த குழந்தைக்கு பாலாற்ற கிச்சனுக்குள் நுழைந்தாள் ஜானு..
என்ன ஜானு.. ஞாயிற்றுக்கிழமை கூட ஏதோ வேலை இருக்குன்னு போறாரு.. அப்படி என்ன வேலை பார்க்கிறார்.. யோசனையோடு அவன் சென்ற வழியை பார்த்தபடி கேட்டாள் மீதா.
இப்போதான் கார்மெண்ட் கம்பெனி ஒன்னுல வேலைக்கு சேர்ந்திருக்கான்..
அப்போ இதுக்கு முன்னாடி..??
மூட்ட தூக்குனான்..
என்ன.. என்ற மிதாவின் முகம் அஷ்ட கோணலாய் சுழிந்தது.. போயும் போயும் மூட்டை தூக்குபவனா இவன்.. மணிமேகலை அளவிற்கு இல்லாவிடினும் சிறு அளவிற்காவது அவள் தாய் புத்தி இருக்க தானே செய்யும்..
ஆனா நான் அவன் வாழ்க்கையில் வரதுக்கு முன்னாடி எப்படி இருந்தவன் தெரியுமா? என்ன முதன் முதலா பாக்குறப்போ இருந்த அசோக்குக்கும் என்னை பார்த்ததுக்கு அடுத்து இருக்கிற அசோக்குக்கும் நிறைய வித்தியாசம்.. அவள் தொடர்ந்து கூறியதில் இவள் புருவங்கள் சுழிந்தன.. இந்த நல்லெண்ணம் தானே இவனோடு சேர்த்து வைத்திருக்கிறது...
என்ன சொல்ற..
நான் வரதுக்கு முன்னாடி பார்ட்டி.. பப்புன்னு அவன் நண்பர்களோடு சந்தோஷமா இருந்தவன்.. அம்மா அப்பா கிடையாது.. அவனுக்குன்னு அந்த வீட்டை சொத்தா எழுதி வச்சுட்டு சின்ன வயசுலயே ஆக்சிடன்ட்ல அவங்க இறந்துட்டாங்களாம்.. அதுக்கு அடுத்து அவன் பிரெண்ட்ஸ் தான் அவனுக்கு எல்லாமே.. தோன்ற வேலையை செஞ்சுட்டு புடிச்ச படி வாழ்ந்துகிட்டு இருந்தான்.. ஆனா நான் எப்போ அவன் லைஃப்குள்ள வந்தேனோ அதிலிருந்து குழந்தையை நல்லா பாத்துக்கணும் என்பதற்காக எங்களுக்காகவே வேலைக்கு போக ஆரம்பிச்சான்... படிச்ச படிப்புக்கு வேலைக்கு போனா கம்மியான சம்பளம் கிடைக்கும்.. குழந்தை பிறக்கும்போது நிறைய பணம் தேவைப்படும்னு எங்களுக்காக மூட்டை சுமக்கிற வேலைக்கு போனான்.. இதோ இத்தனை வருஷம் கழிச்சு இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் சொன்னேன்னு இப்போ புதுசா ஒரு கம்பெனியில் வேலைக்கு போக ஆரம்பிச்சுருக்கான்.. அவன் செய்த எல்லாமே எங்கள மையமாக வைத்து தான் இருக்கும்.. கடைசி வார்த்தைகளில் தானாக அவள் இதழ்கள் புன்னகைக்க மிதாவின் கண்களோ சுருங்கின..
அவள் கூறியதில் ஏதோ விட்டுப் போனதாய் உணர்வு.. அது எப்படி ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் இத்தனை வருடங்களாய் வாழ்ந்த வாழ்க்கையை நொடியில் உதறி ஒருவன் இவ்வளவு தூரம் மாறிவிட முடியும்..?? எழுந்த சந்தேகத்தை கேட்டும் விட..
ம்ம்ம்.. தோள் குலுக்கினாள் ஜான்வி.. அவனுக்கு கிருத்தி நா ரொம்ப பிடிக்கும்.. எது செஞ்சாலும் அவள் தான் அவனுக்கு முதல்ல..
சரி.. அப்போ நாளைக்கு அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா என்ன பண்ணுவாராம்... மிதா சட்டென கேட்டதும்.. இந்த கேள்வியை எதிர்பாரவில்லை என்பது போல் பாலாற்றிக் கொண்டிருந்தவளின் கரம் அந்தரத்தில் நின்று போனது..
பி ப்ராக்டிகல் ஜானு..இங்க எல்லாருக்கும் ஒரு லைஃப் இருக்கு.. யாராலயும் இன்னொருத்தர் லைஃபை வாழ முடியாது.. இப்போ நீங்க இருக்கீங்கன்னு உங்க மேல இவ்வளவு பாசமா இருக்காரு.. நாளைக்கு அவருக்குன்னு ஒரு பொண்ணு வந்தா.. அப்பவும் உங்க மேல இதே பாசமா இருப்பார்ன்னு என்ன நிச்சயம்?? திடீரென அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை ஜானுவால்..
இதுவரை இதுபோல் ஒரு கோணத்தில் என்றுமே சிந்தித்துப் பார்த்ததில்லையே.. அவனும் அது போல் நடந்து கொண்டதில்லை.. ஆனால் இப்போது திடீரென மிதா கேட்டதில் மனதில் சற்று துணுக்கம்..
இங்க பாரு ஜானு.. அவர் உனக்காக நிறைய செஞ்சிருக்கார்.. நான் ஒத்துக்குறேன்.. ஆனா நீ அவர் மேல ரொம்ப அட்டாச்டா இருக்கிற மாதிரி தோணுது.. எத்தனை நாள் டி அவர் உனக்கு துணையாய் இருப்பார்ன்னு நினைக்கிறே.. குழந்தைக்கு அவர்தான் அப்பாவா பழகிவிட்டு இருக்க.. நாளைக்கு அவள் வளர்ந்ததுக்கடுத்து.. குழந்தை தான் வளந்துட்டாளேன்னு அவரு அவருக்கு பிடிச்ச ஒரு லைஃப பாத்துட்டு போனா அந்த நேரம் நீ குழந்தைக்கு என்னன்னு சொல்லி புரிய வைப்ப.. கேட்டாள் மிதா..
புரிஞ்சுக்கோ ஜானு.. கனவுலையோ கதையலையோ வேணும்னா இந்த மாதிரி துறவியாவே போற ஆங்கிள் வரலாம்..
ஆனால் நிஜத்துல இப்படி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை.. அடியே.. என் அண்ணன் தப்பு பண்ணி இருக்கான் தான்.. உன்னை நிறைய இடத்துல காயப்படுத்தி இருக்கான் தான்.. ஆனா இப்போ இந்த நிமிஷம் அவன் உன்ன ரொம்ப விரும்புறான்.. உங்க காதலுக்கு ஆதாரமா இப்போ கிருத்தியும் இருக்கா.. அப்புறமும் ஏண்டி இப்படி தனியா இருக்க.. கஷ்டப்படுற.. அங்க அவனும் தவிச்சுக்கிட்டு தான் இருக்கான்..
எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம்.. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்.. அவ்வளவுதான்..
என்னதான் உனக்கு ஆபத்து காலத்துல உதவுனவரா இருந்தாலும் இத்தனை காலம் உன்னையும் குழந்தையையும் நல்லா பாத்துக்கிட்டாலும் உங்க மனசுல என்ன இருக்கு.. எந்த நேரத்துல நீங்க என்ன நெனைப்பிங்கன்னு அவரால் சொல்ல முடியுமா.. முடியாது.. காரணம் என்னைக்குனாலும் நீங்க அவர் வாழ்க்கையில் இருந்து விலக போறவங்க.. அவள் கூற அன்று அசோக்கும் இதே வார்த்தையை கூறியது நினைவு வந்தது...
ஏனோ அவள் வார்த்தை கொடுக்காத வலியை அன்று அசோக் கூறியதாய் வந்த நினைவு அதிகமாய் கொடுத்திருந்தது..
அவள் புருவங்கள் யோசனையில் சுழிய கண்டு.. புரிஞ்சுக்கோ ஜானு.. உன் லைஃப் வேற.. அவர் லைப் வேற.. என்னதான் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா பாத்துக்கிட்டாலும் உரிமை எடுத்துக்குற அளவுக்கு உங்களுக்குள்ள எந்த பந்தமும் கிடையாது.. அதனால அவங்கவங்க லைப்ப வாழ பாருங்க.. அவளின் உபதேசங்களோடு.. அசோக் கிளம்பிய வேளையில் எங்கே என எழுந்த கேள்வியை முடிக்க முடியாமல் தடுமாற செய்தது இந்த உரிமை தானே.. தோன்ற அமைதியாய் குழந்தைக்கு பாலை கொடுக்க.. குடிக்க ஆரம்பித்தாள் கிருத்தி..
அவர் ஆம்பள.. ஒரு பொண்ணா உன்னுடைய எண்ணங்களையும் விருப்பங்களையும் அவரால புரிஞ்சுக்க முடியாது.. அதுக்கு ஒன்னு காதல் வரணும்.. இல்ல சேர்ந்து வாழ்ற எண்ணம் இருக்கணும்.. அது இரண்டுமே உங்களுக்குள்ள இருக்கிற மாதிரி தெரியல.. அவள் முகத்தையே உற்றுப் பார்த்தபடி கூறினாள் மிதா..
ஆனா என் அண்ணன்.. உன்ன உயிருக்குயிராக விரும்புகிறான்.. உன் கூட சேர்ந்து வாழ ஆசைப்படுறான்.. இன்னைக்கு காலையில இந்த பிஞ்சு முகத்தை பார்த்தப்போ அவன் எப்படி துடிச்சுருப்பான்னு என்னால உணர முடியுது... ஆனா அவனுடைய உணர்வுகள் உனக்கு புரியலையா ஜானு.. தொக்கிய அவள் கேள்வியில் இறைஞ்சலாய் பார்த்தாள் ஜான்வி..
அவளை முழுதாய் குழப்பி விட்டிருந்தாள் மிதா..மிதா ப்ளீஸ்.. இத்தனை வருஷம் கழிச்சு நம்ம சந்திக்கிறோம்.. கொஞ்ச நேரமாவது இத பத்தி பேச வேண்டாமே.. அவள் கூறிய இதுவரை தான் யோசித்திராத விஷயங்களில் தலை விண்விண்ணென வலி எடுத்தது..
ஹ்ம்ம்.. என்னவோ எனக்கு தோணுனதை சொன்னேன்.. அவள் கிருத்தியோடு அமர்ந்து கொள்ள.. சாப்பாடு நைட் உனக்கு என்னடி செய்யட்டும்.. உனக்கு புடிச்ச சிக்கன் கிரேவி பண்ணிடவா.. ஜானு கேட்க.. பாவம் நீயே வேலைக்கு போறவ.. மதியம் இருந்தது கூட ஏதாவது இருந்ததுனா வை.. சாப்பிட்டுக்கலாம்.. அலட்டி கொள்ளாமல் கூறினாள் மிதா..
ம்ம்ஹும்.. என்ன இப்படி சொல்லிட்ட.. எத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்க உனக்கு புடிச்ச மாதிரி செஞ்சு போட மாட்டேனா.. வேலைக்கு போறதால என்ன.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல.. அவள் கூற.. ஹ்ம்ம்.. ஏதாவது உரிச்சு தரணும்னா சொல்லு நானும் பண்றேன்..
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. என்றபடி கிச்சனுக்குள் நுழைந்து சிக்கன் கிரேவிக்கு தேவையான பொருட்களை எடுத்து வெளி வந்தாள்..
தோன்றினால் உடனே அழைத்து விடுபவளுக்கு இப்போது மிதா கூறிய விஷயங்களில் அழைக்க தவிப்பானது.. அப்படி சொல்லாமல் கொள்ளாமல் எங்கே சென்றான்.. ஒருவேளை மிதா கூறுவது போல் அவன் வாழ்க்கை?? வாழ்க்கைத் துணையை சந்திக்க.?? அந்த நினைப்பே பிடிக்கவில்லை.. அவனுக்கு தனி வாழ்வு அமைய கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை.. ஆனாலும் இந்த நினைப்பு ஏனோ பிடிக்காமல் போனது.
ச்சே.. ச்சே.. அசோக்கை பத்தி எனக்கு தெரியும்.. யோசனையினூடே வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்து இருக்க அவள் அருகில் அமர்ந்தாள் மீதா..
எப்ப பாத்தாலும் ஏதாவது யோசிச்சுக்கிட்டே இருக்க.. ஆனா தெளிவான முடிவா தான் எதுவும் எடுக்க மாட்டேங்கிற.. அவள் ஆரம்பித்த வேளையில்.. கொஞ்ச நேரம் டி.. இவள் கண்கள் சுருங்கின.
சரிப்பா நான் எதுவும் பேசல.. அமைதியாய் எதிரில் இருந்த வெங்காயத்தை தானும் இரண்டு எடுத்து உறிக்க ஆரம்பித்தாள் மிதா.
ஏய்ய்ய்.. அவள் செயலில் ஜானுவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன..
பரவாயில்லையே.. வெங்காயம் எல்லாம் உறிக்கிற.. இதெல்லாம் உனக்கு தெரியுமா..
ம்ம்ம்.. தனியா இருந்த நாட்களில் பழகிக்க வேண்டியது தான்..
ம்ம்ம்.. நல்லாவே செய்ற டி.. அவள் கூறியதில் புன்னகைத்தாள் மீதா.. இருவருக்குமே பள்ளிக்கூடம் சென்று வந்த நாட்களில் ஒரு நாள் ஜான்வின் வீட்டில் இருவரும் சேர்ந்து சமைத்து உண்டது நினைவு வர ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்..
சரி.. நான் அசோக் கிட்ட சிக்கன் வாங்கிட்டு வர சொல்றேன்.. எப்படியும் அவனிடம் சொல்லி தானே ஆக வேண்டும் என தனக்கு தானே கூறிக் கொண்ட படி அழைக்க போக.. ஜான்வி.. அழைத்த படி முகத்துக்கு முன் கவரை நீட்டி நின்றிருந்தான் அசோக்.
ஹான்.. அவள் விழிகள் முட்டையாய் விரிந்தன..
இதென்ன..
வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க.. சிக்கன் ஏதாவது செஞ்சு தருவோம்னு வாங்கிட்டு வந்தேன்.. அவன் கூற ஆச்சரியமாய் பார்ப்பது இப்போது மிதாவின் முறை ஆயிற்று..
அப்பாஹ்ஹ்... இதை வாங்க தான் உன்கிட்ட சொல்லலாம்னு கூப்பிட போனை எடுத்தேன் என்ற படி வாங்கி கொண்டாள் ஜான்வி..
என்னதான் நட்புறவாக இருந்தாலும் தன் தோழியை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை என நினைத்தாளே.. ஆனால் அவள் நினைத்த அதே நேரத்தில் செயலாகவே முடித்து இருந்தவனை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு பார்த்தாள் மிதா.. அவள் முதல் எண்ணமே முற்றும் தவறு என காட்டி விட்டானே..
கருத்துகள்
கருத்துரையிடுக